ஆசியகோப்பை போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்திய அணியானது “சூப்பர் 4″ சுற்றுக்கு தகுதிபெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்து குவித்தது. இதையடுத்து விளையாடிய ஹாங்காங் அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக 40 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியடைந்தது. இந்த ஆட்டத்திற்கு பிறகுப பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ், ரோகித்தின் கேப்டன்சி தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதாவது முகமது ஹபீஸ் கூறியதாவது,”இந்திய அணி விளையாடிய இரு ஆட்டங்களிலும் கேப்டன் ரோகித் சர்மா ஹாங்காங் அணிக்கு எதிராக 21 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 12 ரன்கள் எடுத்து இருந்தார். அவர் சிறப்பாக ஆடுவது அணிக்கு மிகவும் அவசியம் ஆகும். அண்மைகால கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சிறந்த தொடக்க ஆட்டக்காரர். அத்துடன் ஹாங்காங் அணிக்கு எதிராக இந்தியஅணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். இந்த வெற்றிக்கு பிறகு நீங்கள் ரோகித்தை பார்த்தீர்களா..? அதாவது ரோகித் சர்மாவின் உடல் பாவனைகள் பற்றி பேசுகிறேன்.
அவர் டாஸ் போடுவதற்கு வந்தபோதே மிகவும் பலவீனமாகவும், குழப்பமாகவும் தெரிந்தார். மிகப் பெரிய இன்னிங்ஸ் விளையாடும் ரோகித்சர்மாவை இதற்கு முன் நான் இப்படி பார்த்தது கிடையாது. கேப்டன் பொறுப்பு அவருக்கு அதிகமான அழுத்தங்களை கொடுத்துள்ளது என நான் கருதுகிறேன். அவர் பல்வேறு கஷ்டங்களை சந்திக்கிறார். இதனால் அவரது பார்ம் குறைந்து உள்ளது. ரோகித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை.
காரணம் இந்தியாவின் கேப்டன் பொறுப்பு அவருக்கு மேலும் அழுத்தத்தை கொடுக்கிறது. ரோகித்சர்மா கிரிக்கெட் பற்றி நிறைய கூறுகிறார். நேர்மறை எண்ணத்துடன் விளையாடக்கூடிய அவரிடம் உடல் அசைவுகளில் அதை காண முடியவில்லை. ஆகவே பேசுவது எளிது, ஆனால் செய்வது கடினம். இனிவரும் காலங்களில் ரோகித் சர்மா தொடர்ந்து அணியை வழிநடத்துவது கடினமாக இருக்கும். அவரால் நீண்டகாலம் கேப்டன் பொறுப்பில் இருக்க முடியாமல் போகலாம். இதனால் அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். இவ்விஷயத்தில் அவரோ (அல்லது) இந்திய குழுவோ முடிவு செய்வார்கள் என நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.