புதுப்பேட்டையிலிருந்து ஆந்திராவுக்கு மினி லாரியில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், புதுப்பேட்டை அருகில் பண்டரக்கோட்டை பகுதியிலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் மாவட்ட திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் காவல்துறையினர் பண்டரக்கோட்டை பகுதிக்குச் சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது ஒறையூர் ரோடு வழியாக வந்த ஒரு மினி லாரியை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் வழிமறித்து சோதனை செய்து பார்த்தனர்.
அதில் 75 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதற்கிடையில் அங்கு வந்த மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோபி முருகன் மற்றும் காவல்துறையினர் மினி லாரியில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் விழுப்புரம் விராட்டிகுப்பம் பகுதியில் வசித்த ஓட்டுநர் 23 வயதுடைய ஜாபர்சேட், தென்னமாதேவியில் வசித்த தொழிலாளர்கள் 36 வயதுடைய ஏழுமலை, 42 வயதுடைய ராஜிலு என்பதும், அவர்கள் புதுப்பேட்டையிலிருந்து ஆந்திராவுக்கு மினி லாரியில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிந்து ஜாபர்சேட் உட்பட 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் 75 மூட்டைகளில் இருந்த 4 டன் ரேஷன் அரிசியையும்,கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி பண்ருட்டி உணவுப் பொருள் பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.