கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் காவல் நிலையத்தில் செல்வராஜ் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் செல்வராஜ் விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் 4 பேர் வேகமாக வந்தனர். அவர்களை செல்வராஜ் தடுத்து நிறுத்தி விசாரித்த போது கோபமடைந்த இரண்டு பேர் அருகே கிடந்த கட்டையால் செல்வராஜை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனால் படுகாயமடைந்து செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருதாச்சலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் செல்வராஜை தாக்கியது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மணி(27), அன்பு(19) உள்ளிட்ட 4 பேர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மணி, அன்பு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் பிரதீப், விஜய் ஆகிய இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.