கயத்தாறு அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
தமிழகத்தில் ஆங்காங்கே ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதால் அதிகாரிகள் திடீர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக சென்ற காரை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து டிரைவரிடம் விசாரணை செய்ததில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பண்டாரக்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த இலங்காமணி என்பது தெரியவந்தது.
அவர் பக்கத்து கிராமங்களில் உள்ள வீடுகளில் ரேசன் அரிசியை வாங்கி மொத்தமாக காரில் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. காரில் 40 கிலோ வீதம் 15 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. பின் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை உணவு கடத்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இலங்காமணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.