அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு ஒரு நிரந்தர தீர்வைக் காண வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆப்கானிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாடுகளின் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் பாகிஸ்தான் ராணுவ படைகள் தங்கள் மண்ணில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக ஆப்கானிஸ்தான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கின்றது. பாகிஸ்தான் அத்துமீறலினை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆப்கானிஸ்தான் கடிதம் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நாவின் நிரந்தர தூதர் அடிலா ராஸ் இதுபற்றி கூறும்போது,” சென்ற பதினைந்தாம் தேதி குனார் மாகாணத்தின் சரகானோ மற்றும் ஆசாத் அபாத் ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் 4 பேரும், பொதுமக்கள் 6 பேரும் கொல்லப்பட்டார்கள். அதுமட்டுமன்றி பொதுமக்களின் சொத்துக்களுக்கும் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இறையாண்மைக்கு எதிராக மற்றும் ஆத்திரமடையும் பல்வேறு செயல்களை பாகிஸ்தான் தொடர்ந்து செய்து வருகிறது. இத்தகைய மோதலில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வினை காண வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.