உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் நடந்த கொலை சம்பவம் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “மிகப் பெரிய பழமையான கட்சி லக்கிம்பூர் சம்பவத்தின் மூலம் புத்துயிர் பெற வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தற்பொழுது ஏமாற்றமே கிடைத்துள்ளது.
மேலும் பழமையான கட்சியின் அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்சினைகளாலும் பலவீனமாக உள்ளது. துரதிருஷ்டவசமாக இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏதும் கிடைக்கப் போவது இல்லை” என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு இவர் மிகப்பெரிய எதிர் கட்சி கூட்டணியை பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் அமைக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை தொடர்ந்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் சந்தித்துள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரையும் அவர் சந்தித்து பேசினார்.
இதற்கு முன்னதாக தன்னுடைய நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரத்தில் விலகும் விதமாக அவருடைய நகர்வுகள் இருந்தன. மேலும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது. இதனால் காங்கிரஸ் தலைமைக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.