லக்கிம்பூரில் விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்ட இந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாக கையாள்வீர்களா? என்று உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் விவசாயிகள் 4 பேர் இறந்ததாகவும், வன்முறையில் 4 பேர் என மொத்தம் 9 பேர் இறந்ததாக சொல்லப்படுகிறது.. இது தொடர்பாக காவலர்கள் தரப்பில் இருந்து நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. மேலும் 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.. மத்திய இணை அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு காவல்துறையினர் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது..
இந்த வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கு ஏற்கனவே நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதுதொடர்பான அறிக்கையை நாளை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தார்கள்..
இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரபிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி இருந்தார்.. அப்போது அவரிடம் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கேட்டனர்.. இதற்கு அவர், இன்னும் நாங்கள் முக்கியமான குற்றம் சாட்டப்பட்டவரை (ஆசிஷ் மிஸ்ரா) கைது செய்யவில்லை என்று குறிப்பிட்டு, நாங்கள் அவருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறோம்..
இன்று காலை அவர் ஆஜராக வேண்டியது, நாளை காலை வரை அவகாசம் கேட்டு இருக்கிறார். எனவே நாளை காலை 11 மணிக்கு கால அவகாசம் கொடுத்து இருக்கிறோம்.. நாளைய தினம் அவர் ஆஜராகவில்லை என்றால் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று உத்தரபிரதேச அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது..
அப்போது, அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஒரு மிக முக்கியமான சம்பவம், அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.. நாடே இதனால் ஒரு பரபரப்பான சூழ்நிலை அடைந்து இருக்கிறது.. சட்டங்கள் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.. வாகனங்கள் எரிப்பு நடந்திருக்கிறது.. ஆனால் இந்த சம்பவத்தை நீங்கள் இப்படித்தான் கையாளுவீர்களா? உத்தரப் பிரதேச மாநில காவல் துறை கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.. நீங்கள் இவ்வாறு நடந்து கொள்வது சரியாக இல்லை..
ஐபிசி 302 கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கூடிய வழக்கின் பிரிவு, அந்த பிரிவின்கீழ் ஒருவர்மேல் உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும்.. இதுதான் நடைமுறையில் இருந்து வருகிறது.. ஆனால் நீங்கள் சம்பந்தப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு சம்மன் அனுப்பி நீங்கள் நேரில் ஆஜராகுங்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.. அழைப்பிதழ்களை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. இது சரியானது தான் என்று நீங்கள் கருதுகிறீர்களா? என்ற கேள்வி கேட்டார்..
அதுமட்டுமில்லாமல், நீங்கள் நேரில் ஆஜராக இன்றைய தினம் வரவில்லை என்றால் உடனடியாக மீண்டும் ஒரு சம்மன் கொடுப்போம் என்று தான் சொல்கிறீர்களே தவிர எந்த நடவடிக்கையும் எடுத்ததாக நாங்கள் பார்க்கவில்லை.. இந்த வழக்கில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவைகள் நடந்ததாக நாங்கள் கேள்விப்படுகிறோம். இந்த விஷயத்தில் காவல் துறையினர் சாட்சிகளை மிரட்டவோ, தடயங்களை அழிக்கும் முயற்சியிலோ ஈடுபடக்கூடாது, உத்தரபிரதேச மாநில டிஜிபி இதனை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்..
அதற்கு உத்தரபிரதேச அரசு, ஒரு நாள் மட்டும் (11 மணி வரை) அவகாசம் கொடுங்கள்.. நாளைய தினம் அவர் ஆஜராகவில்லை என்றால் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.. நாளை முதல் 19ஆம் தேதி வரை தசரா விழாவுக்காக உச்ச நீதிமன்றம் விடுமுறையில் இருக்கிறது.. எனவே இன்றைய தினம் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டது.. உடனடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒத்தி வைப்பதாக கூறினார்..
மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் உத்தரபிரதேச அரசு கண்ணியத்துடன் கட்டுப்பட்டு சும்மா இருக்கக்கூடாது செயல்பட வேண்டும் என்று கூறினார்.. உத்தரபிரதேச அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் இந்த வழக்கை வேண்டுமானால் சிபிஐக்கு மாற்றலாமா என்ற கோரிக்கையை வைத்தார்.. அப்போது அரசியல் காரணங்கள் உள்ளிட்டவற்றை எல்லாம் மறைமுகமாக குறிப்பிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சிபிஐக்கு மாற்றுவது என்பது சரியான முடிவாக இருக்கும் என்று நாங்கள் கருதவில்லை என்று கூறி இவ்வழக்கின் விசாரணையை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்..