லஞ்சம் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள செம்பலகவுண்டம் பாளையம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் மீது வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் செல்வக்குமார் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து வேலகவுண்டம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆள் கடத்தல் வழக்கு அறிக்கையில் செல்வகுமாரின் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் பெயரை சேர்க்காமல் இருப்பதற்காக தலா 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து செல்வகுமார் உடனடியாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரசாயன பவுடர் தடவிய 10 ஆயிரம் ரூபாயை செல்வகுமாரிடம் கொடுத்து அதனை சண்முகத்திடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி செல்வகுமார் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் பணத்தை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகத்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.