வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கமுதக்குடி கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதன் காரணமாக பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சொந்தமாக வீடு கட்டுவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதற்கான அனுமதி கிடைத்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மணிகண்டன் வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் வீடு கட்டுவதற்கான விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டதற்காக ரூபாய் 3,000 லஞ்சம் வாங்கியுள்ளார். இதனையடுத்து மணிகண்டனின் வீட்டுப் பணிகள் ஓரளவு முடிவடைந்தவுடன் அவரது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதை தெரிந்து கொண்ட மகேஸ்வரன் வாலிபரிடம் ரூபாய் 15,000 லஞ்சம் வாங்கியுள்ளார். அதன் பிறகு வீடு கட்டுவதற்கான மீதி பணம் கூடிய விரைவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என மகேஸ்வரன் வாலிபரிடம் கூறியுள்ளார்.
ஆனால் பணம் வர தாமதமானதால் மணிகண்டன் தான் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக வைத்திருந்த பணத்தை வீடு கட்டுவதற்காக பயன்படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்து விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் மணிகண்டன் விஷம் குடிப்பதற்கும் முன்பாக மகேஸ்வரன் தன்னிடம் லஞ்சம் வாங்கியது பற்றிய முழு விபரங்களையும் தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பேரளம் காவல்துறையினர் மகேஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவலை தெரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மகேஸ்வரனை பதவியிலிருந்து நீக்கம் செய்துள்ளார்.