லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கெண்டயகவுண்டனூர் பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விவசாயியான தங்கவேல் என்ற மகன் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நட்ராஜ் இறந்துவிட்டதால் அவரது பெயரில் இருக்கும் விவசாய நிலத்திற்கான மின் இணைப்பை தனது பெயருக்கு மாற்ற வேண்டுமென சேனன் கோட்டையில் இருக்கும் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று தங்கவேல் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் தனக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என உதவி பொறியாளரான ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தங்கவேல் லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினரின் அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய 6 ஆயிரம் ரூபாய் பணத்தை தங்கவேல் கொடுத்த போது ரவிக்குமார் கையும் களவுமாக சிக்கினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரவிக்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.