லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகாதேவிமங்கலம் கிராமத்தில் தினேஷ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாத்தா பெயரில் இருக்கும் வீட்டுமனை மற்றும் காலி மனை உள்ளிட்டவற்றை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக தினேஷ் மகாதேவிமங்கலம் கிராமத்தில் கூடுதல் பொறுப்பாக வேலை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் மனு அளித்துள்ளார். அப்போது 8000 லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவேன் என உதயகுமார் தெரிவித்துள்ளார். பின்னர் 6000 ரூபாய் கொடுப்பதாக தினேஷ் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து தினேஷ் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தினேஷ் உதயகுமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் உதயகுமாரை கையும் களவுமாக பிடித்தனர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.