லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக சதீஷ்குமார்(35) என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் பட்டா மாறுதல் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது பட்டா மாறுதல் செய்து தருவதற்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என சதீஷ்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து செல்வராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செல்வராஜ் சதீஷ்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சதீஷ்குமாரை கையும், களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லஞ்சம் பெறுவதற்கு இடை தரகராக செயல்பட்ட பாலசுப்பிரமணியம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.