வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை காவல்துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பகுதியில் மாதேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்துவிட்டார். இந்நிலையில் மாதேஸ்வரி வாரிசு சான்றிதழ் கேட்டு அழகாபுரம் கிராம நிர்வாக அலுவலர் குமரேசனிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென குமரேசன் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து மாதேஸ்வரி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினரின் அறிவுரைப்படி மாதேஸ்வரி ரசாயன பவுடர் தடவிய பணத்தை குமரேசனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குமரேசனை கையும், களவுமாகப் பிடித்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.