லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிபட்டி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறு தொழில் செய்வதற்கான மும்முனை மின்சாரம் பெறுவதற்கு கல்லாவி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணன் மும்முனை மின்சாரம் பெறுவதற்காக 17,000 ரூபாய் செலுத்திய பிறகும் மின் இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணன் மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என ராஜேஷ் கூறியதாக தெரிகிறது.
இது குறித்து கிருஷ்ணன் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மின் வாரிய உதவி செயற்பொறியாளரிடம் கிருஷ்ணன் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ராஜேஷை கையும், களவுமாக பிடித்துவிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.