லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி ரெட்டியபட்டியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற கடந்த 2010-ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சசிகுமாரின் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க உத்தரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் சசிகுமார் இலவச மின் இணைப்பு வழங்க கோரி உத்தப்பநாயக்கனூர் உப மின் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது உதவி மின் பொறியாளர் சக்திவேல் என்பவர் மின் இணைப்பு வழங்க 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சசிகுமார் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அறிவுரைப்படி சசிகுமார் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை சக்திவேலிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சக்திவேலை கையும் களவுமாக பிடித்துவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சக்தி வேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.