லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரி சிறையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே புன்னை நகர் பகுதியில் சிவகுரு குற்றாலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் நிலம் விற்பனை செய்வதாக கூறி 2 பேர் 1.5 கோடி ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். ஆனால் பணத்தை வாங்கிவிட்டு நிலத்தை எழுதி கொடுக்காமல் சிவகுரு குற்றாலத்தை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சிவகுரு குற்றாலம் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலுவிடம் புகார் அளித்துள்ளார். இந்த வழக்குக்கு தீர்வு கண்டால் அதற்காக 10 லட்ச ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என தங்கவேலு கேட்டுள்ளார். ஆனால் பணம் வாங்கிய நபர்கள் தானாக முன்வந்து சிவகுரு குற்றாலத்திடம் நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளனர். இதை அறிந்து கொண்ட தங்கவேலு ரூபாய் 5 லட்சம் பணம் கேட்டு சிவகுரு குற்றாலத்தை தொந்தரவு செய்துள்ளார்.
இதுகுறித்து சிவகுரு குற்றாலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவகுரு குற்றாலத்திடம் ரூபாய் 5 லட்சம் பணத்தை தங்க வேலுவிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். உடனே சிவகுரு குற்றாலமும் காவல்துறையினரின் அறிவுரையின் பேரில் தங்கவேலுவிடம் ரூபாய் 5 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். அவர் பணத்தை வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அதன்பிறகு தங்கவேலுவிடம் மாலை 6 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை விசாரணை நடந்தது. இதற்கிடையில் தங்கவேலுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 5 லட்சம் பணம் கிடைத்துள்ளது.
இவருடைய வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் இருந்துள்ளார். அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தங்கவேலுவின் உறவுக்காரப் பெண் என கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் தங்கவேலுவிடம் கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் தங்கவேலு சரியான பதிலை அளிக்கவில்லை. அதன்பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தங்கவேலுவை நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 20 நாட்கள் சிறைக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது அந்த உத்தரவின்படி தங்கவேலு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.