சென்னையை அடுத்த ஆவடியில் பட்டாவிற்கு பரிந்துரை செய்ய 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.
சென்னை ஆவடி அடுத்த மூத்தாபுதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். தனது நிலத்திற்கு பட்டா கேட்டு ஆவடி பாலமேடு கிராமநிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிந்துரைக்க கோரி கிராம நிர்வாக அலுவலர் துர்கா தேவியிடம், சதீஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால் அவர் பட்டாவிற்கு பரிந்துரை செய்ய ரூபாய் 2,000 லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார்.
இதனால் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவிடம் புகார் செய்தார். இதனை அடுத்து டிஎஸ்பி குமரகுரு அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் 2000 பணத்தை கிராம நிர்வாக அலுவலர் துர்கா தேவியிடம் லஞ்ச பணத்தை கொடுத்து உள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் துர்காதேவியை பணத்துடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.