லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.பி.ஜி நகரில் வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு கேட்டு மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அரசு நிர்ணயித்த கட்டண தொகையை செலுத்தியுள்ளார். இதனையடுத்து மின் பொறியாளர் சுப்பிரமணியன் என்பவர் தற்காலிக மின் இணைப்பு கொடுக்க கார்த்திகேயனிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு போர்மன் சங்கர் கணேஷ் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்து கார்த்திகேயன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கார்த்திகேயன் சுப்பிரமணியனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்தால் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியனை கையும், களவுமாக கைது செய்தனர். மேலும் சங்கர் கணேசையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.