அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு அதிகாரி கருப்பையா தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா மற்றும் காவல்துறையினர் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அலுவலகத்திற்கு சென்ற அதிகாரிகள் அலுவலகத்தின் நுழைவு வாயிலை இழுத்துப்பூட்டி யாரையும் உள்ளே அனுமதிக்காமல் சோதனை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையையும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சுப்பையா, சுகாதார அலுவலர், மேலாளர், நில அளவையாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள் என அனைவரிடமும் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அலுவலகத்தில் கணக்கில் வரதா பணம் உள்ளதா என்றும், ஊழல் நடந்துள்ளதா என்றும் நடத்திய இந்த சோதனை நள்ளிரவு வரை தொடர்ந்துள்ளது. இதுகுறித்த விரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்ட பின்னரே உண்மை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.