லடாக்கில் விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங் குளத்தை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி கடந்த 19-ஆம் தேதி பணி நிமித்தமாக லடாக் கெளஷியர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. த. அன்பழகன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் மாநகராட்சி ஆணையர் திரு. விசாகர் மதுரை குரூப் கமாண்டர் கர்னல், ரவிக்குமார், டி.ஸ்.பி.வினோதினி உள்ளிட்டோர் ராணுவ வீரரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் அஞ்சலி செலுத்தினர்.
கருப்பசாமிக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்களும் ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடைய இராணுவவீரர் கருப்பசாமியின் உடல் மதுரையில் இருந்து ராணுவ வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில்ராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கருப்பசாமியின் உடல் 24 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.