பூஜை செய்வதாக ஏமாற்றி தங்க நகைகளை மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் நகரில் வசித்து வரும் ரவீந்திர பாபு என்பவர் சோளிங்கர் ரோட்டில் வெங்கடேசன் என்பவரின் கடை பக்கத்தில் ஜோதிடம் பார்ப்பதற்கான போர்டு இருப்பதை கண்டு இரண்டு நாட்களுக்கு முன்பாக அங்கு சென்றுள்ளார். அங்கே இருந்த இரண்டு பேர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி அவரை அமர வைத்து உங்கள் கஷ்டங்கள் தீர அம்மன் சிலைக்கு தங்க நகைகளை அணிவித்து லட்சுமி பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.
இதனால் ரவீந்திர பாபு மூன்று பவுன் தங்க நகை கொண்டு வந்து கொடுத்தார். பின்னர் பூஜை நடத்தப்பட்டது. பூஜை நடத்திய அன்றே நகையை எடுக்க கூடாது. இதனால் மறுநாள் வந்து நகையை வாங்கிக் கொள்ளுங்கள் என ரவீந்திர பாபுவிடம் கூறியுள்ளார்கள். இதை அவரும் நம்பி வீட்டுக்குச் சென்று விட்டு மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது அங்கிருந்து அறை பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் ஆகியும் அங்கு யாரும் வரவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். போலீசாரின் விசாரணையில் ஹேமந்த் குமார் மற்றும் ராமு என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 6 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தார்கள். இவர்கள் ஏற்கனவே ஆர்.கே.பேட்டையில் இதே போல் மோசடி செய்து மூன்று பவுன் தங்க நகையை பறித்து வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடமிருந்த நகையை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.