Categories
தேசிய செய்திகள்

லட்சுமி விலாஸ் டி.பி.எஸ் உடன் இணைகிறது….. கட்டுப்பாடுகள் நீக்கம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!

லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கரூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கி தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. எனவே இந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது, அதன் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கில் இருந்து மாதத்திற்கு 25 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாது என்று அறிவித்துள்ளது.

இதையடுத்து லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வங்கியில் பயன்பெறும் 20 லட்சம் வாடிக்கையாளர்கள் மற்றும் 4 ஆயிரம் ஊழியர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், மேலும் லட்சுமி விலாஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கியதற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

Categories

Tech |