இந்தியாவின் இசைக் குயில் என்று அழைக்கப்படும் பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் சென்ற பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இன்று அவரது 93-வது பிறந்த தினமானது அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு அயோத்தியாவில் சரயு நதிக் கரையில் 7.9 கோடி மதிப்பில் வீணை நிறுவப்பட்டு உள்ளது. இந்த வீணையானது 40அடி நீளமும், 14 டன் எடையும் உடையதாகும்.
இதை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உ.பி.முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சுற்றுலாத் துறை மந்திரி கிஷன்ரெட்டி போன்றோரும் கலந்துகொண்டனர். இதையடுத்து காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது, பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கரின் பிறந்த தினமான இன்று, அவருக்கு நாட்டு மக்கள் மற்றும் என் சார்பாக மனமார்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி அவருடன் எனக்கு நிறைய இனிமையான நினைவுகள் இருக்கிறது. அவருடைய பாடல்களை கேட்கும் போது அவர் குரல் என்னை மயக்கும். அயோத்தியில் ராமர் கோவிலின் பூமிபூஜை முடிந்ததும் மகிழ்ச்சியில் என்னை அழைத்தார். அயோத்தியில் லதா மங்கேஷ்கரின் நினைவாக நிறுவப்பட்டிருக்கும் அந்த வீணை இசை நல்லிணக்கத்தின் அடையாளமாக மாறும். அவ்வீணையிலுள்ள 92 வெள்ளை பளிங்கு கற்களால் செய்யப்பட்ட தாமரை லதா மங்கேஷ்கரின் 92 வயது வரையிலான வாழ்நாளை சித்தரிக்கிறது. இன்று அயோத்தியிலுள்ள ஒரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறினார்.