லத்தேரி பேருந்து நிலையத்தில் ஒரு பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையத்தில் லத்தேரி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்கள் இருந்தார்கள். அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்த 49 வயதுடைய நீதிராஜன் மற்றும் செல்வம் என்பவருடைய மனைவி 32 வயதுடைய நதியா ஆகிய இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.சுப்பிரமணி வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.