சென்ற சில வாரங்களுக்கு முன் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியாகியது. இதற்கு முன் கோமாளி என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி இருந்த பிரதீப் ரங்கநாதன், இப்படத்தில் துணிச்சலாக ஹீரோவாகவும் களம் இறங்கினார். அதற்கு பலனாக இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய காதலர்கள் பல பேர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து, இளைஞர்களை மட்டுமல்ல குடும்பங்களையும் கூட இப்படத்தைப் ரசித்துப் பார்க்கும் வகையில் கொடுத்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். இத்திரைப்படத்திற்கு இங்கே கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு நேற்று வெளியாகியது.
இப்படத்தின் முதல் நாள் காட்சியை ஆந்திராவிலுள்ள ஒரு தியேட்டரில் பிரதீப் ரங்கநாதன், ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்தார். அதன்பின் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர் ஒருவர், அங்கே நின்ற மீடியாக்களிடம் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பையும் டைரக்சனையும், காதலர்கள் தங்களுடைய செல்போன்களை ஒரு நாள் மற்றும் ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளும் புது கான்செப்ட்டையும் உரத்த குரலில் பாராட்டி கொண்டிருந்தார். இந்நிலையில் படம் பார்த்து விட்டு வெளியே வந்த பிரதீப் ரங்கநாதனை பார்த்ததும் அந்த ரசிகர் ஓடிச் சென்று கட்டிப்பிடித்து அலேக்காக தூக்கினார். இதனால் ஆந்திராவில் நமக்கு இப்படியொரு வரவேற்பா என பிரதீப்ரங்கநாதன் ஆச்சரியப்பட்டு போனார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.