லாட்டரியால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இருக்கும் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த டீ கடை உரிமையாளர் அகமது பாஷா. இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ள சமயத்தில், அவரது நண்பரான சதீஷ் என்பவர் அகமது பாஷாவிடம் லாட்டரி சீட்டின் நம்பரை மாற்றி தனக்குப் பரிசு விழும்படி செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அகமது பாஷா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அகமது பாஷாவை சதீஷ் தாக்கிவிட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அதன் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த சதீஷ் மீண்டும் அகமது பாஷாவுடன் நட்பை தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி லாட்டரி பணம் குறித்து பேச வேண்டுமென தனது நண்பர்களுடன் இணைந்து சதீஷ் அகமது பாஷாவை வரவழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று வந்த அகமது பாஷாவிடம் லாட்டரி சீட்டு தொடர்பாக கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் கொண்ட அகமது பாஷா சதீஷை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து சதீஷ் அகமது பாஷாவை கீழே தள்ளி சாலையில் கிடந்த கற்களால் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட அகமது பாஷா தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த கிச்சிப்பாளையம் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் சதீஸ் மற்றும் அவரது நண்பரான மற்றொரு ஆட்டோ ஓட்டுனரை கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை விரைந்து தேடி வருகின்றனர்.