லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அரசனட்டி பகுதியில் இளையபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குமார், சக்திவேல் என்ற நண்பர்கள் இருந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் ஓசூரில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் 3 பேரும் கிருஷ்ணகிரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஓசூர் நோக்கி சென்றுள்ளனர். இதனை அடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற இளையபெருமாள் சூளகிரி மேம்பாலம் பகுதியில் வைத்து முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து லாரிக்கு அடியில் சிக்கி விட்டது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் நண்பர்கள் 3 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.