லாரி டிரைவரை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் லாரி டிரைவரான பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மம்பாளையம் பகுதியிலிருந்து சேலத்திற்கு லாரியில் லோடு ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் பழனிவேல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு சிறிது நேரம் தூங்கியுள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் பழனிவேலை கத்தியால் குத்திவிட்டு அவரிடமிருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பழனிவேலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.