விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சரத்குமார் (30) நேற்று முன்தினம் இரவு சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியிலிருந்து மணலி பெரியார் நகரில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு சிமெண்டு கலவை எந்திர லாரியை ஓட்டிச்சென்றார். இந்நிலையில் தெருவில் தாழ்வாக தொங்கியபடி இருந்த மின்சார கம்பியில் லாரி உரசியது. இதன் காரணமாக சிமெண்டு கலவை எந்திர லாரி முழுதும் மின்சாரம் பாய்ந்தது.
மேலும் சரத்குமார் உடலிலும் மின்சாரமானது பாய்ந்தது. அப்போது அவ்வழியே ஆந்திராவிலிருந்து சவுக்கு கட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த மற்றொரு லாரியின் டிரைவரான சித்தூரை சேர்ந்த சுரேஷ் (44) என்பவர் தன் வண்டியை விட்டு கீழே இறங்கி வந்து, மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சரத்குமாரை காப்பாற்ற முயற்சி செய்தார்.
அதன்படி அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து சரத்குமார் மீது அடித்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த சிமெண்டு கலவை எந்திர லாரி மீது சுரேஷின் கால் உரசியது. இதனால் சுரேஷையும் மின்சாரம் தாக்கியதால் அவர் சுருண்டு விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்த சுரேஷ் மற்றும் சரத்குமார் இருவரையும் சிகிச்சைக்காக மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் சரத்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.