லாரி மீது அரசு பேருந்து மோதியதில் லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கன்னியமங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். டிப்பர் லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று லாரியில் மணலை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் சென்ற போது நெல்லையில் இருந்து தேனியை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் லாரி டிரைவர் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் குமார், நடத்துனர் பாண்டியன் உள்பட பேருந்தில் இருந்த 10 பயணிகள் பலத்தகாயமடைந்துள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆண்டிபட்டி காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயிரிழந்த செல்வக்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.