சென்னிமலை அருகில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்திற்கு நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலத்திலிருந்து கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. அப்போது அந்த லாரியை சத்தியமங்கலத்தில் வசித்த துரைசாமி(62) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த லாரி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருக்கின்ற கிழக்கு ராஜ வீதியில் உள்ள வளைவில் திரும்புகின்ற போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இந்த விபத்தினால் லாரியில் இருந்த கொப்பரை தேங்காய் மூட்டைகள் அனைத்தும் சாலையில் சிதறி கிடந்தன. இந்த இடத்தில் பத்துக்கும் அதிகமான லாரிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வளைவில் திரும்பும் போது லாரியின் வேகத்தை குறைப்பதற்கு சென்னிமலை காவல்நிலையம் முன் தடுப்பு வைக்கப்பட்டு இருந்தும் விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது.