லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் காரில் சென்றுள்ளனர். இந்த காரை நிஹால் அகமது என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த கார் திருச்சி மாவட்டம் செவந்தாம்பட்டி அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது. அப்போது கார் தடுப்பு சுவரின் மீது மோதி சாலையில் உருண்டோடியதால் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு காரில் இருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, தமிழரசி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சும்சுகிதா மற்றும் சாதிக் பாட்ஷா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கிய வர்களை உடனடியாக மீட்டு தீயணைப்பு வாகனத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு அனுமதித்தனர். இதனையடுத்து 4 பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் நிஹால் அகமது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.