லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் மற்றும் பார்த்திபன் இமானுவேல் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் உளுந்தூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் லாரியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சந்தோஷ் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பார்த்திபன் இமானுவேலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பார்த்திபன் இமானுவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.