லாரி மீது கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் 7 மாணவிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் விவேகானந்தா பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு சொந்தமான பேருந்தில் கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டாங்கோவில் பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாணவிகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.