கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கார்வேபுரம் முல்லை நகர் பகுதியில் முரளி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஹரிஷ்(32) என்பவருடன் காரில் தர்மபுரி சென்றுவிட்டு மீண்டும் கிருஷ்ணகிரி நோக்கி புறப்பட்டனர். இந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஹரிஷை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் ஹரிஷ் மற்றும் முரளி ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி அப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.