லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கடியப்பட்டணம் பகுதியில் ஏசுதாஸ்(57) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டெம்போவில் அதே பகுதியை சேர்ந்த ஜான் பேபின்(50), அமல ஜஸ்டின்(42), பிரான்சிஸ்(56), கனகராஜ்(56), ததேயுஸ்(49) ஆகியோருடன் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து டெம்போவில் மீன் லோடு ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை புறப்பட்டார். இந்த டெம்போவை ராஜேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அளத்தங்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் நின்ற லாரி மீது டெம்போ பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 7 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.