லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலிருந்து நெல் முட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திருமங்கலம்- விருதுநகர் நான்கு வழிச்சாலையில் ராஜபாளையம் பிரிவு இடத்தின் அருகே இருக்கும் பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தது. அதே சமயம் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி வேன் வந்து கொண்டிருந்தது. அந்த வேனை பொன்ராஜ்(25) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. இதனை அடுத்து படுகாயமடைந்த பொன்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் சிக்கிய வேனை கிரேன் உதவியுடன் மீட்டனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.