தென் கிழக்கு ஆசிய நாடான லாவோசில் வருடந்தோறும் ஏப்ரல் 14-16ஆம் தேதி வரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டை முன்னிட்டு அங்கு ஒரு வாரத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. தற்போது இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 35 நபர்கள் உயிரிழந்தாக, அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சென்ற 11- 17 ம் தேதி வரையிலான 7 நாட்களில் 312 விபத்துகள் ஏற்பட்டதாகவும், இதில் 35 பேர் பலியானதோடு, 552 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவற்றில் அதிகபட்சம் தலைநகர் வியன்டியேனில் 45 விபத்துகளில் 8 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த விபத்துகள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக ஓட்டுதல் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியாதது ஆகிய காரணங்களால் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.