Categories
கரூர் மாவட்ட செய்திகள்

லிப்டில் சிக்கிய 10 பேர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

லிப்ட் பழுதானதால் உள்ளே சிக்கியிருந்த 10 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், மின்சாரதுறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் அமைச்சர் கணேசன் புறப்பட்டு சென்றுள்ளார்.

இதனை அடுத்து பயனாளிகள் 2-வது மாடியில் இருந்து கீழே இறங்குவதற்காக லிப்ட்டை பயன்படுத்தியுள்ளனர். அந்த லிப்டில் 6 பெண்கள் உள்பட 10 பேர் இருந்தனர். இந்நிலையில் தரைதளத்திற்கு வந்த பிறகு லிப்டின் கதவை திறக்க முடியாததால் வெளியே நின்று கொண்டிருந்தவர்களுக்கு செல்போன் மூலம் தகவலை தெரிவித்தனர். இதனால் வெளியே இருந்தவர்களும், லிப்டுக்குள் சிக்கி இருந்தவர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் லிப்டை திறக்க முடியவில்லை.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லிப்டின் கதவை உடைத்து உள்ளே சிக்கியிருந்த 10 பேரையும் பத்திரமாக மீட்டனர். சுமார் 30 நிமிடங்கள் லிப்டில் சிக்கி இருந்ததால் மூதாட்டி ஒருவர் மயக்கம் அடைந்தார். இதனால் உடனடியாக மூதாட்டியை ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |