மதுரை மாவட்டத்திலுள்ள கல்லம்பல் பகுதியில் வசிக்கும் சிவலிங்கம் என்பவர் நேற்று முன் தினம் தனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் லிஸ்ட் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி சிவலிங்கம் மற்றும் அவரது சகோதரரிடம் இருந்த செல்போன்களை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அந்த மர்ம நபர்கள் புதுப்பட்டி, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு உத்தங்குடி பகுதியை சேர்ந்த அக்கினி, சுதர்சன், பிரவீன்குமார் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அவர்கள் தான் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்தது உறுதியானது. இதனையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 வாள், செல்போன்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டியுள்ளார்.