இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் 5 மாநிலங்களில் பதிவாகியுள்ளது.
ஜூலை முதல் வார முடிவில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் அதிக கொரோனா பாதிப்புகள் இருப்பது அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து 6 நாட்களாக தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 482 பேர் உயிரிழந்ததால், மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 750 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் தொற்று 2 லட்சத்து 17 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. அங்கு மட்டும் உயிரிழப்பு ஒன்பதாயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பீகாரில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தலைநகர் பாட்னாவில் ஜூலை 10 ஆம் தேதி முதல் 7 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.