தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை9 மாவட்ட ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்த ஒன்பது மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான முன் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
அந்த வகையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனுபவமுள்ள மற்றும் அரசியல் கட்சிகளை சாராத, அரசியல் கட்சிகளின் அனுதாபியாக இல்லாத நபர்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அந்த 9 மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள அந்த ஒன்பது மாவட்டங்களில் 3 வருடங்களாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை 31-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து மூன்று வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றி வருபவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், அவர்கள் விரைவில் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.