Categories
உலக செய்திகள்

 லீவு கொடுங்க… மறுப்பு கூறிய மேலாளர்… கழுத்தை அறுத்த தொழிலாளி…!!!

துபாயில் வேலை செய்து வந்த தொழிலாளி ஒருவர் தனக்கு விடுப்பு அளிக்காத மேலாளரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.

துபாயில் இருக்கின்ற அல் குவாஷ் தொழில்துறை பகுதியில் உள்ள கேரேஜில் கிர்கிஸ்தான் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் கடந்த ஜூன் மாதம் தன் தாய் நாட்டிற்கு செல்ல கம்பெனி மேலாளரிடம் தனக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து திட்டி அனுப்பிவிட்டார். அதனால் மிகுந்த ஆத்திரம் அடைந்த அந்த தொழிலாளி, மற்ற ஊழியர்கள் அனைவரும் வெளியே சென்றிருந்த நேரத்தில் தனியாக இருந்த கம்பெனி மேலாளரை கத்தியால் கழுத்தை அறுத்தும் சுத்தியால் பலமாக தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

அதன் பின்னர் அவர் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து நாடு திரும்புவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் விமானம் இல்லாத காரணத்தால் அவரால் அங்கிருந்து செல்ல இயலவில்லை. அதே சமயத்தில் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்ததால் அவரால் நாடு திரும்ப முடியவில்லை. மறுநாள் அவர் தனது நாட்டின் தூதரகத்திற்கு சென்று தான் நாடு திரும்புவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அவர் எந்த ஒரு விவரங்களையும் கூறாததால் தூதரகம் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை.

தூதரகத்தில் இருந்து வெளியே வந்த அந்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு துபாய் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில், மேலாளரை திட்டமிட்டு கொலை செய்ததாக தொழிலாளி மீது அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் நான்காம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |