லெபனான் நாட்டில் நேற்று நடந்த வெடிவிபத்தில் பலர் மாயமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று மிகப் பெரிய வெடி விபத்து ஒன்று ஏற்பட்டது. அந்த விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் 70 பேர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். வெடி விபத்தின் மூலமாக தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் ஆகியவை இடிந்து விழுந்துள்ளன. இடிந்த கட்டிடங்களில் இருந்து மக்கள் அனைவரும் ஓடுகின்ற காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இதனைத் தொடர்ந்தே பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்த வெடி விபத்தில் பலர் மாயமாகி இருப்பதாக லெபனான் அரசு கூறியுள்ளது. இதுபற்றி லெபனான் சுகாதாரத்துறை செயலாளர் ஜமாத் ஹசன் கூறுகையில், இந்த வெடிவிபத்தில் பலர் மாயமாகிய உள்ள நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. மின்சாரம் தடைப்பட்டு இருப்பதால் தேடுதல் பணி மிகவும் சிரமமாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பெய்ரூட் கவர்னர் மர்வான் கூறுகையில், 100க்கும் அதிகமான மக்கள் மாயமாகி இருக்கின்றனர். அதில் தீயணைப்பு வீரர்களும் உள்ளடங்கியுள்ளன என கூறியுள்ளார். மேலும் இதுபற்றி லெபனான் பிரதமர் ஹசன் கூறுகையில், துறைமுகத்தில் 2750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து ஆறு ஆண்டுகளாக எத்தகைய பாதிப்பும் இல்லாமல் வைக்கப்பட்டிருந்தது.இதனால் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என்பதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்த விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.