தலைநகர் சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக பெருநகர போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநகர மற்றும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவித்தது. இதன் மூலமாக லட்சக்கணக்கான பெண்கள் தினமும் பயனடைந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் அரசு பேருந்துகளில்பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
அதாவது கடந்த ஆண்டு 40% ஆக இருந்த பெண் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், கடந்த ஓராண்டில் தமிழக முழுவதும் 132 கோடிக்கும் அதிகமானோர் இலவச பயணத் திட்டத்தால் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் திறம்பட செயல்படுத்தும் நோக்கில் 1600 கோடி ரூபாய் அளவிற்கு தமிழக அரசு மானியமாக ஒதுக்கி உள்ளது. இந்தத் திட்டத்தால் பெண்கள் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடிகிறது. இருந்தாலும் இந்த திட்டம் சாதாரண பேருந்துகளில் மட்டுமே செல்லுபடியாகும்.
இதனை அறியாமல் எக்ஸ்ப்ரஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளில் ஏறி பெண்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெண்கள் இலவசமாக பயணிக்க கூடிய அனைத்து பேருந்துகளையும் பிங்க் நிறத்தில் மாற்ற சென்னை பெருநகரப் போக்குவரத்து கழகம் தற்போது முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் அடுத்த வாரம் முதல் பிங்க் நிற பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து வழித்தடங்களிலும் சேவையை விரிவு படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.