சீன நாட்டில் ஆன்லைன் “லைவ்” வில் முன்னாள் மனைவியை தீ வைத்து எரித்துக்கொன்ற நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனா நாட்டில் சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான் லமு என்பவர். இவர் சீனாவில் உள்ள சமூகவலைதள செயலியான டுவ்யுன் என்ற செயலில் மிகவும் பிரபலமானவர். டிக்டாக் போன்ற அம்சங்களை கொண்ட டுவ்யுன் செயலியில் பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு லமு பிரபலமடைந்தார். லமுவின் கணவர் தங் லு ஆவார். இவரும் டுவ்யுன் செயலியில் பிரபலமான நபராக இருந்து வந்தார். 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த கணவன் மனைவி இடையே 2020-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. லமுவை அவரது கணவர் தங் லு பல முறை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தங் லு-வை விட்டு பிரிந்த லமு அவரை கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் விவகரத்து செய்தார். ஆனால், விவாகரத்து செய்த பின்னரும் தன்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு லமுவை அவரது முன்னாள் கணவர் தங் லு கட்டாயப்படுத்தியுள்ளார். அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லமு வீட்டிற்கு தங் லு வந்துள்ளார். அந்த சமயம் லமு தனது சமூகவலைதள செயலியான டுவ்யுனில் புதிய வீடியோ தொடர்பாக ஆன்லைனில் “லைவ்” வீடியோ வெளியிட்டுக்கொண்டிருந்தார். அந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது வீட்டிற்கு வந்த தங் லு தன் முன்னாள் மனைவி லமு உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த சம்பவம் ஆன்லைனில் “லைவ்” வீடியோவாக ஒளிபரப்பாகியுள்ளது. இந்த சம்பவம் சீனா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. முன்னாள் கணவன் தீ வைத்ததில் படுகாயமடைந்த லமு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் சில வாரங்களில் உயிரிழந்துள்ளார். இந்த கோர சம்பவத்தில் ஈடுபட்ட லமுவின் முன்னாள் கணவர் தங் லுவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த குற்றம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் தங் லு குற்றவாளி என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. மேலும், குற்றவாளி தங் லுவுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனையை எதிர்த்து தங் லு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு கடந்த ஜனவரி மாதம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் தங் லுவுக்கு தூக்கு தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டது. முன்னாள் மனைவி லமுவை தீ வைத்து எரித்துக்கொன்ற வழக்கில் குற்றவாளி தங் லுவுக்கு நேற்று தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டதாக சீன அரசு ஊடகம் இன்று தெரிவித்துள்ளது.