லோடு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் தாய்-மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழையபேட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புருவம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மீன் வியாபாரியான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது தாயுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழையில் மீன் வாங்கிவிட்டு ஒரு லோடு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பானான்குளம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் லோடு ஆட்டோவின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் லோடு ஆட்டோவின் பின் பகுதியும், காரின் முன் பகுதியும் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புருவம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.