லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகராஜன் அலுவலகத்தின் முன்பு முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சதீஷ் பாபு தலைமையில் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன் உள்பட 6 விவசாயிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனியில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு சென்றால் தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள், ஆகவே தற்போது வைகை அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தையே விரிவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதனை அறிந்த ஆண்டிபட்டி துணை சூப்பிரண்டு அதிகாரி தங்க கிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதுகுறித்து எம்எல்ஏவிற்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்த பின்னரே விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர் .