வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு விழுந்து 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் இருக்கும் பாரதியார் நகரில் மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தனர். இந்நிலையில் 1-வது வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு திடீரென இடிந்து விழுந்ததால் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
அவர்களை ஆசிரியர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.