வங்கதேசத்தில் முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனை அவமதித்ததாக வீடியோவானது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற துர்கா பூஜையில் அடையாளம் தெரியாத முஸ்லிம் சிலர் இந்து கோயிலில் நுழைந்து அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் ராங்பூர் மாவட்டம் மஜிபாரா என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் முஸ்லிம்களை குறித்து அவதூறாக முகநூலில் கருத்து தெரிவித்ததன் காரணமாக அந்தப் பகுதிக்குள் நுழைந்த முஸ்லிம்கள் 20 வீடுகளுக்கு தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் 66 வீடுகளைச் சூறையாடி உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்துக்கள் மற்றும் இந்து கோவிலில் மீதான தாக்குதல்களை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் பேசிய பிரதமர் ஷேக் ஹசீனா, உள்துறை அமைச்சர் அசாதுசமான் கானுக்கு மதத்தை உபயோகித்து வன்முறையை தூண்டுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆணையிட்டார். மேலும் உண்மை என்ன என்பதை அறியாமல் சமூகவலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் எதையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.